சேலம்-விருத்தாசலம் ரயில்பாதை மின் மயமாக்கும் திட்டத்தில் கூடுதலாக செவ்வாய்பேட்டை வரை பணி நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய வழித்தடங்களில் சேலம்- விருத்தாசலம் ரயில் பாதை உள்ளது. சேலத்தை புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களுடன் இணைக்கும் இந்த வழித்தடத்தை மின் மயமாக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டது.
இப்பாதையில் சேலம் டவுன் ரயில் நிலையம் வரை மின் கம்பங்கள் நிறுவுதல், மின் கம்பிகளால் இணைப்பு கொடுத்தல், வழி நெடுக உள்ள ரயில் நிலையங்களில் மின் இணைப்பு ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன மேலும், தற்போது கூடுதலாக சேலம் செவ்வாய்பேட்டை ரயில் நிலையம் வரை மின் மயமாக்குதல் பணி தொடங்கி இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.
இப்பணிகள் முடிந்ததும் இந்த வழித்தடத்தில் முதல்கட்டமாக மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட சரக்கு ரயில் போக்குவரத்தை தொடங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சேலம்- விருத்தாசலம் ரயில் வழித்தடத்தை மின் மயமாக்கும் திட்டத்தில் தொடக்கத்தில் சேலம் டவுன் ரயில் நிலையம் வரை திட்டமிடப்பட்டது. சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முதல் செவ்வாய்பேட்டை ரயில் நிலையம் வரை ஏற்கெனவே, மின் மயமாக்கப்பட்ட பாதை உள்ளது.
எனவே, சேலம் டவுன் ரயில் நிலையத்தை செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்துடன் இணைத்தால் சேலம் ஜங்ஷன் தொடங்கி விருத்தாசலம் ஜங்ஷன் வரை தொடர் மின் பாதை கிடைக்கும். எனவே, சேலம் டவுன் ரயில் நிலையம் முதல் செவ்வாய்பேட்டை ரயில் நிலையம் வரை மின்மயமாக்கும் பணி நீட்டிக்கப்பட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பணிகள் நிறைவடைந்ததும் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படும்.
ஓரிரு மாதங்களில இப்பாதையில் சரக்கு ரயில் போக்குவரத்துத் தொடங்கப்படும். பின்னர் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago