திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9-ம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் மந்தமாக இருந்த வேட்புமனு தாக்கல், இறுதி நாட்களில் விறுவிறுப்படைந்துள்ளது.
மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி அலுவலகங்களிலும் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் திரண்டுவந்து மனு தாக்கல் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மட்டும் 1,885 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்றும் ஏராளமான வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களில் கூட்டம் அதிகமிருந்தது. குறிப்பாக பாளையங்கோட்டை, ராதாபுரம், மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். முக்கிய அரசியல் கட்சிகளும், கூட்டணி கட்சிகளும் தங்களது வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்துள்ள நிலையில், இன்று அவர்கள் அனைவருமே மனு தாக்கல் செய்கிறார்கள்.
வேட்புமனு தாக்கலுக்குப்பின் நாளை (23-ம் தேதி) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை வரும் 25-ம் தேதிக்குள் வாபஸ் பெறலாம். அன்று மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago