திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை காரணமாக தாழ்வானப் பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.
வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் தாக்கம் கடந்த மூன்று நாட்களாக தீவிர மடைந்துள்ளது. தொடர் மழையால், தாழ்வானப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. அதில் கழிவுநீரும் கலந்துள்ளதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் போளூர் சாலையில் 2 அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கியது. மேலும், அம்பேத்கர் நகர், அண்ணாநகர், பழைய புறவழிச் சாலை, காந்தி நகர், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமை யாக பாதிக்கப்பட்டனர்.
மேலும், திண்டிவனம் சாலை யில் உள்ள நொச்சிமலை ஏரி நிரம்பி வழிந்து, வீனஸ் நகர், கிருஷ்ணவேணி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது. இதனால், 75-க்கும் மேற்பட்ட வீடுகள் தத்தளித்தன.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “திருவண்ணா மலையில் ஒரு நாள் பெய்த மழைக்கே, எங்கள் பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. 4 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கிக்கிடக்கிறது. விஷ பூச்சிகள் நடமாட்டம், கொசுக்கள் உற்பத்தி உள்ளது. இதனால், நோய் தொற்று ஏற்படுகிறது. வட கிழக்கு பருவ மழை தொடங்கினால், மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில், நாங்கள் அவதிப்படுகிறோம். இதற்கு தீர்வு காண வேண்டும்” என்றனர்.
இந்நிலையில் ஜவ்வாது மலையில் பெய்து வரும் கன மழையால், பீமன் நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பீமன் நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள் ளனர். மேலும் அவர்கள், பீமன் நீர் வீழ்ச்சியில் குளிக்கவும் தடை விதித்துள்ளனர்.
இதேபோல், கலசப்பாக்கம் பகுதியில் 24 மணி நேரத்தில் 16 செ.மீ., மழை பெய்துள்ளது. இதனால், தாழ்வானப் பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களை மழை நீர் சூழ்ந்தது. கன மழையால் செய்யாறு, துரிஞ்சலாறு மற்றும் கமண்டல நாக நதியில் தண்ணீர் செல்கிறது.
மழை நிலவரம்
திருவண்ணாமலை மாவட்டத் தில் நேற்று காலை நிலவரப்படி சராசரியாக 33.58 மி.மீ., மழை பெய்துள்ளது. கலசப்பாக்கத்தில் 159, திருவண்ணாமலையில் 54, ஜமுனாமரத்தூரில் 69, கீழ்பென் னாத்தூரில் 96.8, போளூரில் 12.6, தண்டராம்பட்டில் 8, சேத்துப் பட்டில் 2.6, ஆரணியில் 1, மழை பெய்துள்ளது.தொடர் மழையால், குப்பநத்தம் அணைக்கு விநாடிக்கு 70 கனஅடி தண்ணீரும், மிருகண்டாநதி அணையில் விநாடிக்கு 80 கனஅடி தண்ணீரும், செண்பகத் தோப்பு அணையில் விநாடிக்கு 32 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago