திருமுருகன்பூண்டி அருகே கணபதி நகரில் - பாறைக்குழியில் குப்பை கொட்ட : எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பையை, திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளையம் கணபதி நகர் பாறைக்குழியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் நேற்று கடையடைப்பு மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்டது அம்மாபாளையம் 11-வது வார்டு கணபதி நகர், கானக்காடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பை மற்றும் மருத்துவக் கழிவுகளை, லாரிகளில் கொண்டு வந்து, கணபதி நகர் பாறைக்குழியில் கொட்டுவது வழக்கம். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

எனவே பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் எனக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அம்மாபாளையம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

திருமுருகன்பூண்டி போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி, ஓரிரு நாட்களில் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்க மறுத்து, நேற்று காலை கடைகளை அடைத்து, அருகிலுள்ள மாகாளியம்மன் கோயிலில் காத்திருப்புப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். நீண்ட நேரத்துக்குப்பின் போலீஸாரின் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொண்ட போராட்டக் குழுவினர், காத்திருப்புப் போராட்டத்தை கைவிட்டனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பதாக முடிவு செய்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அம்மாபாளையம் பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்