திருப்பூர், நீலகிரியில் வடிகால் தூய்மைப் பணி தொடக்கம் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகராட்சியின் 4-ம் மண்டலத்துக்கு உட்பட்ட 56-வது வார்டு பாரப்பாளையத்தில், மாநகராட்சிக்கு உட்பட்ட 1506 கி.மீ நீளமுள்ள வடிகால் தூய்மைப் பணிகளை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழிசெல்வராஜ் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இதில், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார். தெற்கு எம்.எல்.ஏ. க.செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

இதில், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும், சுமார் 1506 கி.மீ நீளமுள்ள வடிகாலை தூய்மை செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தாழ்வான நீர்தேங்கும் பகுதிகள், பாதாள சாக்கடைகள் ஆகியவற்றில் மழைநீர் தேங்கி பொது மக்களுக்கு சுகாதார கேடு மற்றும் உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, மாபெரும் தூய்மைப் பணி முகாம் வரும் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

பெரிய மழைநீர் வடிகால்களில் சேதாரமாகியுள்ள வடிகால் படிவுகளை அகற்றுவதற்கு, பொக்லைன், ஜெட் ராடிங் இயந்திரம் போன்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். முகாமில் மொத்தம் 3,030 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்பணிகள் 6 நாட்கள் நடைபெறும்,’’ என்றார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து திருப்பூர் திமுக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், தூய்மைப் பணியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுடன் இணைந்து கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

உதகை

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாமை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் முதல்கட்டமாக மழைநீர் தேங்கும் பகுதியான காந்தல் முக்கோணம், குருசடி காலனி பகுதிகளில் தூய்மைப்பணி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. உதகை நகராட்சியில் உள்ள 36 வார்டுகள் உள்ளடக்கிய பகுதிகளில் கால்வாய்கள் 3 கி.மீ சிறிய கால்வாய்கள் 6.885 கி.மீ மற்றும் சிறுபாலங்கள் 40 உள்ளன. நகராட்சி பகுதிகளில் உள்ள 36 வார்டுகளையும், 6 மண்டலங்களாக பிரித்து தூய்மைப்பணியை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, உதகை சார்-ஆட்சியர் மோனிகாராணா, நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE