விவசாய பயிர்களை சேதப்படுத்தும் - காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் விதிகளில் தளர்வுக்கு ஆலோசனை : தருமபுரி மாவட்ட வன அலுவலர் தகவல்

By எஸ்.ராஜா செல்லம்

விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை தடுப்பது தொடர்பான விதிகளில் தளர்வு அளிப்பது தொடர்பாக மாநில அரசு ஆலோசித்து வருகிறது என தருமபுரி மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

தருமபுரி உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட வனப்பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் உள்ளன. மலைக் கிராம மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் நுழைந்து வேளாண் பயிர்களை அதிக அளவில் சேதம் செய்து வருகிறது.

அரசுக்கு தொடர் கோரிக்கை

இச்சேதங்களுக்கு வனத்துறை மூலம் அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படுகிறது.

இருப்பினும், இழப்பீடு கிடைப்பதைக் காட்டிலும் விளைநிலங்களில் நுழையும் காட்டுப்பன்றிகளை தடுக்க வேண்டும் என்பதை விவசாயிகள் அதிக அளவில் விரும்புகின்றனர். இதுதொடர்பாக விவசாயிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையில், காட்டுப்பன்றி களால் விளைநிலங்கள் அதிக அளவில் சேதமடையும் 7 மாவட்டங்களைச் தேர்வு செய்து, அந்த மாவட்டங்களில் விளைநிலங்களில் நுழையும் காட்டுப் பன்றிகளை சுட ஏற்கெனவே தமிழக அரசு அனுமதி அளித் துள்ளது.

கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் இதில் அடங்கும்.

பகலில் சுடக்கூடாது

இவ்விதிகளின்படி பகல் நேரங்களில் காட்டுப்பன்றிகளை சுடக் கூடாது. இரவு நேரங்களிலும் விளைநிலங்களில் நுழையும்போது நிலத்துக்குள் தான் அவற்றை சுட வேண்டும், அவ்வாறு சுடும்போதும் ஆண் பன்றிகளை மட்டுமே சுட வேண்டும், சுடும் பணியை வனத்துறையில் பணிபுரியும் வனச் சரகர் அல்லது அதற்கு மேற்பட்ட நிலையிலான அதிகாரிகள் முன்னிலையில் தான் சுட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன.

தற்போது 7 மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை பன்றிகளின் தொல்லை அதிகம் உள்ள மேலும் சில மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும், இந்த அனுமதியில் உள்ள நிபந்தனைகளில் மேலும் சில தளர்வுகளை அளித்திட வேண்டும் என விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் அரசிடம் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், அரசு இந்த விதிகளில் தளர்வு அளிக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

அரசு இறுதி முடிவு எடுக்கும்

இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட வன அலுவலர் நாயுடுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

காட்டுப்பன்றிகள் பெருக்கமும், அவற்றால் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகள் சிலவற்றில் வேளாண் பயிர்கள் சேதம் அடைவதும் உண்மை தான். பயிர்ச் சேதம் முதல் உயிர்ச் சேதம் வரை விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கி வருகிறது.

காலத்துக்கு ஏற்றபடி இந்த இழப்பீடு நிவாரணத் தொகை உயர்த்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், விளைநிலங் களில் நுழையும் பன்றிகளை சுடும் உத்தரவை தேவைக்கு ஏற்ப தமிழகம் முழுக்க விரிவுபடுத்துவது, நிபந்தனைகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது போன்றவை தொடர்பாக வனத்துறை சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

காட்டுப்பன்றிகளை தடுப்பது தொடர்பாக முழு சுதந்திரம் அளித்து விட்டால் சில மாதங்களிலேயே காட்டுப்பன்றி இனமே சுட்டு அழிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டே விதிகளை தளர்த்துவது உள்ளிட்டவை தொடர்பாக திட்டமிட்டு அரசு இறுதி முடிவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE