கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா பகுதியில் மழைநீர் வடிகால் தூய்மைப் பணியை நகராட்சி ஆணையர் முருகேசன் தொடங்கிவைத்து பார்வையிட்டார். அடுத்த படம் : தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட மதிகோன்பாளையம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியை ஆட்சியர் திவ்யதர்சினி தொடங்கிவைத்து பார்வையிட்டார்.கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் - 62 கிமீ தூரம் கால்வாய் சுத்தம் செய்யும் பணி தொடக்கம் :

கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில் நகரப் பகுதியில் 62 கிமீ தூரம் கால்வாய் சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற மழைநீர் வடிகால் தூய்மைப் பணியை நகராட்சி ஆணையர் முருகேசன் தொடங்கிவைத்து கூறியதாவது:

தமிழகம் முழுவதும் 6 நாட்களுக்கு மழைநீர் வடிகால் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இன்று (நேற்று) முதல் 6 நாட்களுக்கு கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட 62 கிமீ தூரம் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுகிறது.

காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை, 6 ஜேசிபி இயந்திரங்கள், 12 டிராக்டர்களைக் கொண்டு இப்பணிகள் நடந்து வருகிறது.

இதில், வருவாய்த்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை ஆகிய துறை அதிகாரிகள் இணைந்து இப்பணியை மேற்கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் நகராட்சியில் நடந்து வரும் தூய்மைப் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியர் பிரதாப், ஆர்ஐ மாது, துப்புரவு ஆய்வாளர்கள் சந்திரகுமார், செந்தில்குமார், உதயகுமார், னிவாசலு, அனைத்து தூய்மைப் பணி மேற்பார்வையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூரில் 334 கிமீ தூரம்

ஓசூர் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.

ஓசூர் ராயக்கோட்டை சாலையில் நடந்த தூர்வாரும் பணி தொடக்க நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் முன்னிலை வகித்தார். பணிகளை ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால்வாய்கள் மற்றும் ஓடைகளில் தேங்கியுள்ள படிமங்கள், பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் இதர கழிவுகள் மூலமாக ஏற்பட்டுள்ள அடைப்புகள் அனைத்தும் 25-ம் தேதி வரை அகற்றி மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீர் புகாத வகையில் தூய்மை பணிமேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி ஓசூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பெரிய கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்வாய்கள் அனைத்தும் தூர்வாரும் பணி மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களின் மூலம் நடைபெறும். இப்பணி மாநகராட்சியின் 6 மண்டலங்களில் உள்ள 45 வார்டு பகுதிகளில் 334 கிமீ தூரம் நடைபெறுகிறது. இப்பணிகளில் 8 பொக்லைன் இயந்திரங்களும், 210 தூய்மைப் பணியாளர்களும் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி இளநிலை பொறியாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நேற்று கழிவுநீர் கால்வாய் தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட மதிகோன்பாளையம் பகுதியில் நடந்த பணியை ஆட்சியர் திவ்யதர்சினி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் வைத்திநாதன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாச சேகர், நகராட்சி ஆணையர் (பொ) சரவண பாபு, வட்டாட்சியர் ராஜராஜன், தருமபுரி, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், மகாலிங்கம், சகிலா, மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE