புதுச்சேரியில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம் :

புதுவையில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதுவரை 9.12 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

புதுவையில் நேற்று முன்தினம் 4,069 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில்

புதிதாக 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது 867 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனரை். புதிதாக 109 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில் புதுவை சுல்தான்பேட்டையைச் சேர்ந்த 78 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பு எண்ணிக்கை 1,832 ஆக உயர்ந்துள்ளது.

புதுவையில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 331 பேர் (2-வது தவணை உட்பட) தடுப்பூசி போட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் அருண் கூறுகையில், “புதுவையில் இதுவரை தடுப்பூசி செலுத்தாத அனைவருக்கும் விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்த முயற்சி எடுத்துள்ளோம். புதுச்சேரியின் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும், எம்எல்ஏ தலைமையில் மருத்துவக்குழு இணைந்து வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை திங்கள் முதல் தொடங்கினர். மேலும், புதுவையின் அனைத்து மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார மையங்களிலும் நாள்தோறும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதை பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE