கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்து வழக்குகளில் சிக்கி காவல் நிலையங்களில் திறந்தவெளியில் ஆண்டுக் கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் நேற்று உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஒவ்வொரு காவல்நிலையத்திலும் தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விபத்து நடக்கும் போது விபத்தில் ஈடுபடும் வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவைகளை காவல் நிலையத்தில் திறந்தவெளியில் நிறுத்தி வைத்திருப்பார்கள். அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் வழக்கு விசாரணை முடிந்த பிறகு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
ஆனால் பல வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததாலும், உரிமையாளர்கள் இல்லாததாலும், குறித்த நேரத்தில் அவற்றை ஆய்வுசெய்து, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு அனுப்பாதாலும் பல வாகனங்கள் காவல் நிலைய வளாத்தில் ஆண்டுக் கணக்கில் மழையிலும், வெய்யிலும் சிக்கி மக்கும் நிலையில் இருக்கும்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் இதுபற்றி அறிந்து, நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்தில் ஈடுபட்ட மற்றும் விபத்திற்குள்ளான மொத்தம் 258 வாகனங்களையும், வாகனத்தின் உரிமையாளர்கள் தேவைபடும் போது நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வாகனத்தை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் பெற்றுக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் அபராதத்தை செலுத்தியதற்கான ரசீது, உரிமைச்சான்று ஆகியவற்றை எடுத்து வந்து காவல் நிலையத்தில் காண்பித்து வாகனங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி இதுவரை கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் மொத்தம் 149 வாகனங்களில் 110 வாகனங்களும், உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் மொத்தம் 87 வாகனங்களில் 73 வாகனங்களும், திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் உள்ள 22 வாகனங்களில் 22 வாகனங்கள் என 205 வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 53 வாகனங்களின் உரிமையாளர்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு சென்று உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago