சாலையில் திரிந்த மாடுகளை கத்தியால் குத்தியது யார்? :

By செய்திப்பிரிவு

மதுரையில் சாலையில் திரிந்த 10 மாடுகளை மர்ம நபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர்.

மதுரையில் கால்நடைகளை வளர்ப்பவர்கள் மேய்ச்சலுக்காக மாடுகளை அவிழ்த்து விடுகின் றனர். இந்த மாடுகள் வீடுகள் முன் வைத்திருக்கும் மரம், செடிகளை கடித்து சேதப்படுத்தி விடுகின்றன. மேலும் மார்க்கெட் பகுதியில் நுழைந்து காய்கறிகளை சாப்பிட்டு விடுகின்றன.

இதனால் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், வியாபாரிகள் சில நேரங்களில் மாடுகளின் வால் மீது தீ வைத்து விடுகின்றனர். தல்லாகுளம், கோரிப்பாளையம், ஆனையூர், சூர்யாநகர், ஆழ்வார்புரம் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் சாலைகளில் திரிந்த மாடுகள் மீது மர்ம நபர்கள் ஆசிட், சூடான எண்ணெய் ஊற்றிச் சென்றனர். இதில் அவை காயம் அடைந்தன. இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணியில் சுற்றித் திரிந்த 10 மாடுகளை மர்ம நபர்கள் சிலர் நேற்றுமுன்தினம் இரவு கத்தியால் குத்தி உள்ளனர். இதில் மாடுகள் பலத்த காயம் அடைந்தன.

இதுகுறித்து கே.புதூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சகாயராஜ் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE