சிவகங்கை மாவட்டத்தில் - 300 கி.மீ. தூர கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை : ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தகவல்

By செய்திப்பிரிவு

சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய 3 நகராட்சிகளில் 300 கி.மீ. தூரத்துக்கு கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் செப்.20 முதல் 25-ம் தேதி வரை நகராட்சி, பேரூராட்சி, கிராமங்களில் உள்ள வரத்துக் கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தெப்பக்குளம் வரத்துக் கால்வாயில் தூர்வாரும் பணியை ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி நேற்று தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் (பொ) பாண்டீஸ்வரி, நகரமைப்பு ஆய்வாளர் திலகவதி, சுகாதார அலுவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது: மெகா தூர்வாரும் பணி மூலம் சிவகங்கை, காரைக்குடி, தேவக்கோட்டை ஆகிய 3 நகராட்சிகளிலும் 300 கி.மீ. தூரத்துக்கு கால்வாய்களை சுத்தம் செய்து சீரமைக்கப்படும். அதோடு, 12 பேரூராட்சிகள், 445 ஊராட்சிகளில் கண்மாய், குளங்களுக்குச் செல்லும் வரத்துக் கால்வாய்கள் தூய்மைப்படுத்தப்படும். இதன்மூலம் மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீர் முழுமையாக சேமிக்கப்படும்.

காரைக்குடி நகராட்சியில் ரூ.5 கோடியில் வடிகால்கள் சீரமைக்கப்பட்டு, கான்கிரீட் தளம் ஏற்படுத்தப்படும். மேலும் ஊருணிகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு பேவர்பிளாக் கற்கள், முள்வேலி அமைக்கப்படும்.

சிவகங்கையில் காஞ்சிரங்கால் பகுதியில் தெப்பக்குளத்திற்கு வரும் வரத்துக்கால்வாய் சீரமைக்கப்பட்டு கான்கிரீட் கால்வாயாக மாற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்