முன்னீர்பள்ளம் அருகே அடுத்தடுத்து கொலைகள் - கிராம மக்களை சந்தித்து பேசிய அதிகாரிகள் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கடந்த சில நாட்களுக்குமுன் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடைபெற்றதால் பதற்றம் நிலவி வருகிறது.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் சுற்றுவட்டாரகிராமங்களுக்கு சென்று மக்களிடம் அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இந்நிலையில், முன்னீர்பள்ளம் பகுதியில் குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் முன்னீர்பள்ளம் தருவை, மேலச்செவல், கொத்தன்குளம், கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த இரு தரப்பு ஊர் முக்கியஸ்தர்களை காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் அழைத்து சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கான ஆலோசனை வழங்கினர். கோபாலசமுத்திரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமை வகித்தார். சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

சாதி ரீதியான உயர்வு தாழ்வுகளை களைவதற்கு அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் , சமூகவேறுபாடுகளினால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதிப்புகளையும், அதனால் ஒரு சமூகத்தில் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் குறித்தும் விளக்கினர்.

கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், சேரன்மகாதேவி வட்டாட்சியர் பாலசுப்ரமணியன், காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் கலந்துகொண்டனர்.

52 பேர் மீது நடவடிக்கை

முன்னீர்பள்ளம் அருகே இருவர்கொலை செய்யப்பட்ட வழக்கில்10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர்தேடப்படுகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 52 பேர்மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவர்களில் 27 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 25 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள் என்று, போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE