தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி உட்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகிற 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது.
ஊராட்சித் தலைவர், ஊராட்சிவார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு சுயேச்சை சின்னங்களில் மட்டுமே போட்டியிட முடியும். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அரசியல்கட்சிகளின் சார்பிலும் போட்டியிடலாம். கடந்த 4 நாட்கள் நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டுமே வேட்புமனு தாக்கல் அதிகளவில் நடைபெற்றது.
அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு பேச்சுவார்த்தை முடியாததால் ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் மந்தமாக இருந்தது. வேட்புமனு தாக்கல் நாளையுடன் (22-ம் தேதி) நிறைவடைகிறது. இந்நிலையில், பல்வேறு கட்சிகளில் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஓரளவு உடன்பாடு ஏற்பட்டதால் ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யத்தொடங்கியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய ஒரே நேரத்தில் அதிகமான வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் நேற்று திரண்டதால் பரபரப்பு நிலவியது.
கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதுபோல மற்ற ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் கூட்டம் அதிகமிருந்தது.
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்பதவிகள் 14, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகள் 144, ஊராட்சி தலைவர் பதவியிடங்கள் 221, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் 1,905 என, மொத்தம் 2,284 பதவியிடங்களுக்கு நேரடி தேர்தல் நடைபெற உள்ளது.மாவட்டத்தில் ஊராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று ஏராளமானோர் குவிந்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் வாக்கு சேகரிப்பு பணியைத் தொடங்கியதால் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago