சென்னை ஃபோர்டு நிறுவனத்தில் மீண்டும் கார் உற்பத்தி தொடக்கம் : ஊழியர்கள் உணவை புறக்கணித்து போராட்டம்

சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு கார் நிறுவனத்தில் கடந்த இரு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் கார் உற்பத்தி நேற்று தொடங்கியது. உற்பத்தி தொடங்கினாலும் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் உணவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் பல ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. சென்னையில் மறைமலை நகர் மற்றும் குஜராந்த் சனந்த் பகுதிகளில் அந்த நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்த ஆலைகளில் வருடத்துக்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் குறைந்த அளவிலேயே கார்கள் உற்பத்தி நடைபெறுவதால் அந்த நிறுவனங்கள் சார்பில் இழப்பை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டது. ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள இரு ஆலைகளையும் மூட ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இதனால் இந்தத் தொழிற்சாலையை நம்பியுள்ள 4 ஆயிரம் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறைமுகத் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்துள்ளன. தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் ஊழியர்களின் பணி பாதுகாப்பு குறித்து தொழிற்சங்கங்கள் வைத்த கோரிக்கைகளை ஃபோர்டு நிர்வாகம் ஏற்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் மூலப்பொருள் இல்லாத காரணத்தாலும், ஊழியர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததாலும் கடந்த இரண்டு வாரமாக மறைமலை நகர் தொழிற்சாலையில் கார் உற்பத்தி நடைபெறவில்லை.

இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் கார் உற்பத்தி தொடங்கியுள்ளது.

தொழிற் சங்க நிர்வாகிகள் மற்றும் நிறுவனத்தில் முக்கிய அதிகாரிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த வாரம் நடைபெற்றது. ஊழியர்களின் வேலையை உறுதி செய்ய வேண்டும் என்பது குறித்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. ஆனால் நிர்வாகம் தரப்பில் இழப்பீடு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் ஊழியர்கள் உணவை தவிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஃபோர்டு நிறுவனத்துக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை உற்பத்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது. இந்தக் கார்கள் உற்பத்தி முடிந்த உடன் தொழிற்சாலையை மூட அந்த நிறுவனம் திட்டமிட்டத்தில் உறுதியாக இருப்பதால் ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE