குடியாத்தம் அருகே : ஒற்றை யானை அட்டகாசம் :

By செய்திப்பிரிவு

குடியாத்தம் அருகே தமிழக-ஆந்திர எல்லையில் சுற்றி வரும் ஒற்றை யானை பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் இரவு நேரங்களில் தூக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் தமிழக -ஆந்திர எல்லை அருகேயுள்ள கவுன்டன்யா வனப் பகுதியில் யானைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சரணாலயம் பகுதியில் இருந்து ஒற்றை யானை தனியாக சுற்றி வருகிறது.

அவ்வப்போது, இந்த ஒற்றை யானை தமிழக எல்லையோர கிராமங்களுக்குள் இரவு நேரத்தில் புகுந்து விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சைனகுண்டா, மோடிகுப்பம், கீழ்கொல்லப்பல்லி, மத்தெட்டிப்பல்லி கிராமங்களில் இரவு நேரத்தில் சுற்றித் திரிந்த யானை தென்னை, மா, நெற் பயிர்களை சேதப் படுத்தியுள்ளன. கீழ்கொல்லப்பல்லி கிராமத்தில் வேணு, ஏகாம்பரம், துரைசாமி மற்றும் தினகரன் ஆகியோர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த தேங்காய் செடிகளுடன் நெற் பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளன.

வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ஏ.கே.ஜெயப்பிரகாஷ் கூறும்போது, ‘‘இரவு நேரத்தில் கிராமங்களில் சுற்றி வரும் ஒற்றை யானையை விவசாயிகளால் விரட்ட முடியவில்லை. வனத்துறையினர் இந்த பகுதியில் தங்கியிருந்து கண்காணித்து விரட்ட வேண்டும். ஒற்றை யானையால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE