கோவை அரசு மருத்துவமனையில், கடந்த 2 ஆண்டுகளில் - 200 பேருக்கு நுண்துளை ரத்தநாள அறுவைசிகிச்சை :

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளில் 200 பேருக்கு நுண்துளை ரத்தநாள அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் டீன் நிர்மலா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: அரசு மருத்துவமனையில் ரத்த நாள அறுவைசிகிச்சைத் துறை 2019 ஆகஸ்ட் மாதம் இரண்டு ரத்தநாள நிபுணர்களுடன் தொடங்கப்பட்டது. நோயாளிகளுக்கு கை, கால், குடல், மூளை போன்ற இடங்களில் ரத்தநாள அடைப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதி அழுகி குடல், கை, கால்களை அகற்றும் நிலை ஏற்படும். இதைத் தவிர்க்க, நுண்துளை ரத்தநாள அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. இவ்வாறு அடைப்பு ஏற்பட்டால் நோயாளிக்கு தாங்கமுடியாத வலி ஏற்படும். அத்தகைய நேரங்களில் தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகினால் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து, அடைப்பை கண்டறிந்து அதை அகற்றினால் கை, கால் இழப்பை தவிர்க்க முடியும்.

தற்போது வரை கோவை அரசு மருத்துவமனையில் 200 நோயாளிகளுக்கு நுண்துளை ரத்தநாள அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 3 மாதங்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதியவர்கள், இருதய நோயாளிகள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பான முறையில் இந்த அறுவைசிகிச்சையை அளிக்க முடியும். தனியார் மருத்துவமனையில் இந்த அறுவைசிகிச்சைக்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும். இங்கு முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை தலைவர் கே.ராஜேஷ், மருத்துவர்கள் பா.வடிவேலு, பா.தீபன்குமார் ஆகியோர் இந்த சிகிச்சையை சிறப்பாக செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்