புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் என்ஆர் காங்., - பாஜக இடையே தொடர் இழுபறி : முதல்வர் ரங்கசாமியை திடீரென்று சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் ஆளும் கூட்டணியான என்ஆர் காங்கிரஸ் - பாஜக இடையே தொடர் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் திடீரென்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. வரும் 22-ம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ள நிலையில் யார் தேர்தலில் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆட்சியில் உள்ள நிலையில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே யார் வேட்பாளரை நிறுத்துவது என்று இறுதி செய்ய முடியாமல் இழுபறி நீடித்து வருகிறது.

புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் பாஜகவுக்கு சீட் ஒதுக்க வலியுறுத்தி பாஜக மற்றும் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி கடந்த வெள்ளிக்கிழமையன்று முதல்வர் ரங்கசாமியிடம் கொடுத்தனர். அதற்கு முதல்வர் ரங்கசாமி இதுவரை எந்த முடிவும் அறிவிக்காமல் மவுனம் காத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு பற்றி அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, “பாஜக எம்எல்ஏக்கள், ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி, மாநிலங்களவை எம்பி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். இதை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அளித்தோம். ஆனால் முதல்வர் அதிகாரப்பூர்வமான பதில் தரவில்லை. இந்நிலையில் கட்சித்தலைமை மீண்டும் ரங்கசாமியை சந்தித்து பதில் பெற்றுத்தரும்படி அறிவுறுத்தியது. இதனடிப்படையில் முதல்வரை சந்தித்தோம். அவர் நேரடியாக பாஜக தலைமையிடம் பேசுவதாக தெரிவித்துள்ளார். ரங்கசாமி நல்ல முடிவெடுப்பார் என நம்புகிறோம். முதல்வரும், அகில இந்திய தலைமையும் பேசி இறுதி முடிவை அறிவிப்பார்கள்" என்று குறிப்பிட்டார்.

இதுபற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்ததில், “மாநிலங்களவை தேர்தலில் பாஜகவுக்கு சீட் ஒதுக்க முதல்வரை அக்கட்சி தரப்பில் வலியுறுத்துகின்றனர். முதல்வர் ரங்கசா மியோ என்ஆர் காங்கிரஸ்தான் மாநிலங் களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக முடிவு எடுத்துள்ளார். இதனால் என்ஆர் காங்கிரஸ் - பாஜக இடையே யார் போட்டி என்பதில் ஆளும் கூட்டணியில் தொடர் இழுபறி நீடிக்கிறது” என்று குறிப்பிடுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE