தென்காசி மாவட்டத்தில் - ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் 9,918 ஊழியர்கள் : முதல்கட்ட பயிற்சி 24-ம் தேதி நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணியில் 9,918 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். அவர் களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர் மற்றும் வாசுதேவ நல்லூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 6-ம் தேதியும், கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை மற்றும் தென்காசி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 9-ம் தேதியும் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் 754 வாக்குப்பதிவு மையங்களிலும், இரண்டாம் கட்டமாக 574 வாக்குப்பதிவு மையங்களிலும் நடைபெற உள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவு மையங்களில் 5,618 வாக்குப்பதிவு அலுவலர்கள், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு மையங்களில் 4,300 வாக்குப்பதிவு அலுவலர்கள் என, மொத்தம் 9,918 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு கணினி மூலம் நடைபெற்றது. பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு நல்லூர் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியிலும், கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளியிலும், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு கொடிக்குறிச்சி  ராம் நல்லமணி யாதவா கல்லூரியிலும், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு அத்தியூத்து சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியிலும், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு அப்பனேரி ஜிவிஎன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு மேலநீலித நல்லூர் பசும்பொன் நேதாஜி பாலிடெக்னிக் கல்லூரியிலும், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு சங்கரன்கோவில் வையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு செங் கோட்டை எஸ்ஆர்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தென்காசி ஊராட்சி ஒன்றியத்துக்கு தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு புளியங்குடி எஸ்.வீராசாமி செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிலும் தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

பணி ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு பணிக்கான ஆணை வழங்கப்படும். பணி ஆணை பெற்றவர்கள் பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று, ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

முதல் கட்ட தேர்தல் 754 வாக்குப்பதிவு மையங்களிலும், இரண்டாம் கட்டமாக 574 வாக்குப்பதிவு மையங்களிலும் நடைபெற உள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்