டாஸ்மாக் மதுக்கடைகள் அருகே தடுப்பூசி முகாம் அமைக்க வேண்டும் : வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தல்

தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் அருகே தடுப்பூசி செலுத்தும் முகாம் அமைத்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை அம்மன்குளம் பகுதியில் பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நேற்று நடைபெற்றது. அதை தொடங்கிவைத்தபின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதாவது:

பெண்களுக்காக மருத்துவ சிகிச்சை முகாம் மூலம் பரிசோதனை மட்டுமின்றி, சிகிச்சை தேவைப்பட்டால் பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செய்யப்படும். 90 சதவீத பெண்களுக்கு நோய் தொடர்பான பரிசோதனை செய்துக்கொள்ளும் உணர்வு இல்லை. அதன் அடிப்படையில், அவர்களுக்காக இதுபோன்ற முகாம் நடத்தப்படுகிறது. பொதுமக்களிடையே இன்னமும் கரோனா தடுப்பூசி தொடர்பான அச்சம், தயக்கம் உள்ளது. பெண்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், டாஸ்மாக் செல்லும் ஆண்களுக்கு டாஸ்மாக்கில் மது அருந்த முடியாதோ என்ற அச்சம் உள்ளது. தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் அருகே தடுப்பூசி முகாம் அமைத்தால் விரைவாக தடுப்பூசிகளை செலுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE