மாநகரின் பல்வேறு இடங்களில் - தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது :

கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாநகர காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நகை பறிப்பு, வழிப்பறி, திருட்டு, செல்போன் பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர் உத்தரவிட்டார். அதன்பேரில், மாநகர காவல்துறையினர் மேற்கண்ட சம்பவங்களில் தொடர்புடைய நபர்களைப் பிடிக்க புலன் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், பீளமேடு காவல்துறையினர், தங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்ற போது, சந்தேகத்துக்குரிய முறையில் சுற்றிய இருவரை பிடித்து விசாரித்தனர். அதில் பிடிபட்டவர்கள், உப்பிலிபாளையம் அருகேயுள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் வீதியைச் சேர்ந்த சரவணன் (30), அன்னூர் அருகேயுள்ள ஓதிமலை சாலையைச் சேர்ந்த கண்ணன் (20) எனத் தெரிந்தது. மேலும், இவர்கள் இருவரும் மாநகரின் பல்வேறு இடங்களில் நகை பறிப்பு, வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாநகர காவல்துறையினர் கூறும்போது, ‘‘சரவணன், கண்ணன் ஆகியோருக்கு 9 குற்ற வழக்குகளில் தொடர்புள்ளது. பீளமேடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 நகை பறிப்பு வழக்குகள், ஆர்.எஸ்.புரத்தில் ஒரு வாகனத் திருட்டு வழக்கு, காட்டூர் மற்றும் ரேஸ்கோர்ஸில் தலா ஒரு நகை பறிப்பு வழக்கு, சரவணம்பட்டியில் நகை பறிப்பு முயற்சி வழக்கு, வடவள்ளியில் நகை பறிப்பு வழக்கு ஆகியவற்றில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து 10 பவுன் நகை, இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பலமுறை குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டாலும், தற்போது முதல் முறையாக சிக்கியுள்ளனர்,’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE