நாமக்கல் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் இரு பணியாளர்கள் மேற்கொள்ளும் வேலையை ஒருவர் மேற்கொள்ளும் நிலை உள்ளது.
நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சேகரமாகும் குப்பை தூய்மைப் பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் மக்கும் குப்பை, மக்கா குப்பை எனத் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பை உரமாக தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
இதுபோல் மக்கா குப்பையில் மறுசுழற்சிக்கு பயன்படும் கழிவுகள் அரியலூரில் உள்ள தனியார் சிமென்ட் ஆலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சியில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் தூய்மைப் பணியாளர்கள் இல்லை. அதுபோல் பேட்டரி வாகனங்களும் இல்லை.
இதனால், சரிவர தூய்மைப் பணியில் ஈடுபடமுடியாததுடன் இருவர் செய்யும் வேலையை ஒருவர் மேற்கொள்ளும் நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி துப்புரவு அலுவலர் சுகவனம் கூறியதாவது:
நாமக்கல் நகராட்சியில் மொத்தம் உள்ள 39 வார்டுகளிலும் சேர்த்து நாள்தோறும் 35 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில், 16 டன் மக்கும் குப்பை நகராட்சியில் உள்ள 4 நுண்ணுயிர் கூடங்களில் உரமாக்கப்படுகிறது. மீதமுள்ள குப்பைக் கழிவுகளில் மறு சுழற்சி செய்யக்கூடிய மக்காத குப்பை அரியலூர் சிமென்ட் ஆலைக்கு நாள்தோறும் 2 லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.
இந்தாண்டு இதுவரை மட்டும் 950 டன் குப்பைக் கழிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. அதேவேளையில் தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மொத்தம் 750 தூய்மைப் பணியாளர்கள் தேவை. எனினும், 400 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதில், 299 பேர் அவுட் சோர்சிங் முறையில் நியமனம் செய்யப்பட்டவர்கள். மீதம் உள்ளவர்கள் நிரந்தரப் பணியாளர்கள்.
கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்வது தொடர்பாக உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பேட்டரி வாகனங்கள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. தற்போது 24 வாகனங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தள்ளுவண்டிகளும் பயன்பாட்டில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago