விவசாய நிலத்தில் மின் இணைப்புடன் கூடிய சோலார் மின் உற்பத்தி திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விவசாயத்திற்கு மின்சார பயன்பாட்டினை குறைத்து, சூரிய ஒளி சக்தி மின்பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில், விவசாய நிலத்தில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் இலவச மின் இணைப்புடன் கூடிய மோட்டார்களுக்கு பதிலாக சூரிய ஒளி சக்தியில் இயங்கும் மோட்டார்களை மானிய விலையில் வழங்கும் திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, இத்திட்டத்தில், 75 எச்பி வரை குதிரைத் திறன் கொண்ட மோட்டார்கள் பயன்படுத்தும் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும். சோலார் மின் சக்தி இணைப்பு பெறுவதற்கு 60 சதவீதம் அரசால் மானியம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 40 சதவீதம் விவசாயிகள் செலவினம் மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக, வங்கிகளில் குறைந்த வட்டி விகிதத்தில் எளிதாக கடன் வழங்கப்படுகிறது. மேலும், சோலார் மின் சக்தி மூலம் பெறப்படும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் மாநில மின்துறை மூலம் ரூ.2.28 வழங்கப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட மின்சக்தி போக மீதமுள்ள மின்சாரத்திற்கு ஊக்கத்தொகையாக ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் 50 பைசா வீதம் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்படும் சோலார் தகடு 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து மின்சக்தி உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதனால் விவசாயிகளுக்கு 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வருமானம் கிடைக்க வழிவகை ஏற்படுகிறது. எனவே, அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதுதொடர்பான விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago