கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த 19 குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.57 லட்சத்திற்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம், 19 குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.57 லட்சம் மதிப்பிலான காசோலைகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசுகையில், கரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு, அவர்களின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்புத் தொகையாகவும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வைப்பு தொகையாக வரவு வைக்கப்பட்டு, அவர்கள் 18 வயது முடிவடைந்தவுடன் வட்டியுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்கட்டமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பெற்றோரில் ஒருவரை இழந்த 39 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து, அவர் தம் வங்கி கணக்கிற்கு ஈசிஎஸ் மூலம் நேரடியாக செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஈசிஎஸ் மூலம் செலுத்தும் நடைமுறை மாற்றப்பட்டதையடுத்து 2-ம் கட்டமாக பெற்றோரில் ஒருவரை இழந்த 19 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் காசோலையாக தற்போது வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன் மற்றும் குழந்தைகளின் பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago