ஆலங்குளம் அருகே அரசுப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காய்ச்சல் :

By செய்திப்பிரிவு

ஆலங்குளம் அருகே அரசுப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் பெற்றோர் அச்சம் அடைந்தனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மாறாந் தையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரையான 450 மாணவர்களுக்கு வகுப்பு நடைபெற்று வருகிறது.

மாணவ, மாணவிகள் காலை யில் வகுப்புக்கு வரும்போது, அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு இயல்பு நிலையில் இருந்தால் வகுப்புக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவர்களை பரிசோதித்தபோது, அவர்களில் 20-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. தகவல் அறிந்த ஆலங்குளம் மருத்துவ அலுவலர் முகம்மது தாரிக், வட்டார மருத்துவ அலுவலர் குத்தாலராஜ் மற்றும் நடமாடும் மருத்துவக் குழுவினர் மாறாந்தை பள்ளிக்குச் சென்று காய்ச்சல் அறிகுறி தென்பட்ட மாணவர்களைத் தனிமைப்படுத்தி அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் 30 பேருக்கும், நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கும் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. அவர்களு க்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெரும்பாலும் உடையாம்புளி மற்றும் புதூர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஏராளமான மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, “முதலில் பரிசோதனை செய்யப்பட்ட 52 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. மலேரியா காய்ச்சலும் இல்லை. சாதாரண காய்ச்சல்தான் என்பதால் அச்சப்பட வேண்டாம். வெள்ளிக் கிழமை 104 பேருக்கு கரோனா பரிசோதனைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவு சனிக்கிழமை (இன்று) தெரியவரும்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்