தி.மலை மாவட்டம் ஆங்குணம் கிராமத்தில் - சாராய வியாபாரத்தை தடுத்து நிறுத்துங்கள் : குழந்தைகளுடன் சென்று ஆட்சியரிடம் பெண் மனு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அடுத்த ஆங்குணம் கிராமத்தில் உள்ள சாராய கடையை மூட வலியுறுத்தி ஆட்சியர் பா.முருகேஷிடம் நேற்று குழந்தைகளுடன் சென்ற பெண் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், “என் பெயர் ரூபா. கணவர் பெயர் அன்பழகன். எங்களுக்கு தீபிகா(4), தியா(2) ஆகிய 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். எனது கணவர், சென்னையில் லாரி ஓட்டி வந்தார். நாங்கள் அனைவரும் சென்னையில் வாடகை வீட்டில் வசித்தோம். கரோனா தொற்றால் வேலை இழந்ததால், சொந்த கிராமத்துக்கு வந்துவிட்டோம். அந்த நாளில் இருந்து தற்போது வரை, ஆங்குணம் கிராமத்தில் விற்கப்படும் சாராயத்தை அன்பழகன் குடித்து வருகிறார்.

இதனால் எனது குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. கணவன், மனைவி இடையே சண்டைகள் நடை பெறுகிறது. வருமானம் இல்லாமல் நானும், எனது பிள்ளைகளும் தவிக்கிறோம்.

சாராய வியாபாரி வீட்டுக்கே சென்று, எனது கணவர் வந்தால் சாராயம் கொடுக்காதீர்கள் என கூறியுள்ளேன். ஆனாலும், அவரிடம் சாராயம் வாங்கி குடிப்பதை எனது கணவர் வழக்கமாக கொண்டுள்ளார். தொடர்ந்து சாராயம் குடித்த தால், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. ஓட்டுநர் தொழிலையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தை இல்லாமல் என்னையும், எனது சகோதரிகளையும் வளர்த்த, எனது தாயின் நிலை, எனக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது. எனது கணவருக்கு பார்வை குறைந்ததால், புதுச்சேரி அருகே தவளக்குப்பத்தில் உள்ள கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்று வந்துள் ளார். அங்கு அவர்கள் வழங்கிய மாத்திரைகளையும் உட்கொள்ள வில்லை.

எனவே, எங்கள் கிராமத்தில் சாராய வியாபாரத்தை தடுத்துநிறுத்தி, எனது பிள்ளைகளின் தந்தையையும் எனது வாழ்க்கையும் மீட்டுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்