‘நீட்’ தேர்வு எதிர்ப்பு மசோதாவுக்கு - குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காவிட்டால் போராட்டம் : முத்தரசன், திருமாவளவன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

‘நீட்’ தேர்வு எதிர்ப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் தெரிவித்தனர்.

மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் நேற்று அளித்த பேட்டி:

மறைமுகமாக மனுதர்ம கொள்கையை புகுத்துவதற்கான உள்நோக்கம் கொண்டது ‘நீட்’ தேர்வு. சட்டப்பேரவையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் காலதாமதமின்றி ஒப்புதல் வழங்க வேண்டும்.

இல்லையெனில், தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகும். அதேபோல, குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அரசுகளுக்கு தொல்லை கொடுப்பதற்காகவே ஆளுநர்களைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றார்.

அப்போது, கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் த.இந்திரஜித், ஒன்றியச் செயலாளர் சி.தங்கராசு, துணைச் செயலாளர் ஏ.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தில் ‘நீட்’ தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட மாணவி கனிமொழியின் வீட்டுக்கு நேற்று சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கனிமொழியின் படத்துக்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து, கனிமொழியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘நீட்’ தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் மரணத்தை பாஜகவினர் கொச்சைப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

‘நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்