கரூர் ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.62 ஆயிரம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கிய கரூர் எம்.பி செ.ஜோதிமணி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
நீட் தேர்வுக்காக மாணவர்கள் யாரும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தகுதியும், திறமையும் இருக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பை ஏற்படுத்தி தருவது அரசியல் கட்சிகளின் கடமை.
நீட் தேர்வுக்கு எதிராக கடந்த ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு வித்தியாசம் உள்ளது. தற்போது, திமுக ஆட்சியில் முறைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரும், பிரதமர் மோடியும் நினைத்தால் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago