சிவகங்கை அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்த 2 சிறுவர்களை அதிகாரிகள் மீட்டனர்.
சிவகங்கை அருகே ஒக்கூர்- கொழக்கட்டப்பட்டி சாலையில் 2 சிறுவர்கள் கொத்தடிமைகளாக ஆடு மேய்த்து வருவதாக சைல்டு லைனுக்கு புகார் வந்தது. இதையடுத்து சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன் தலைமையில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராமச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் கலாவதி, விஏஓ கவுரிசங்கர் ஆகியோர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களை மீட்டனர்.
விசாரணையில், தஞ்சை மாவட்டம், பெத்தநாஞ்சிவயலைச் சேர்ந்த முத்துக்கண்ணு (62) சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே பூதகுடியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் ரூ.60 ஆயிரம் பெற்று கொண்டு தனது 14 வயது மகனை ஆடு மேய்க்க அனுப்பி உள்ளார்.
அதேபோல் பெத்தநாஞ்சிவயலைச் சேர்ந்த அஞ்சம்மாள் (53), பூதகுடியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவரிடம் ரூ.50 ஆயிரம் பெற்று கொண்டு தனது சகோதரரின் 14 வயது மகனை கொத்தடிமையாக ஆடு மேய்க்க அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து விஏஓ கவுரிசங்கர் புகாரில் கிருஷ்ணன், தர்மலிங்கம், முத்துக்கண்ணு, அஞ்சம்மாள் ஆகிய 4 பேர் மீது மதகுபட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் மீட்கப்பட்ட சிறுவர்கள் குழந்தைகள் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago