சிவகங்கையில் சட்டக் கல்லூரி வராததற்கு யார் காரணம் என கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுகவினரிடையே போஸ்டர் யுத்தம் நடந்து வருகிறது.
சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உட்பட 12 நீதிமன்றங்கள் உள்ளன. இதனால் பயிற்சி அளிக்க ஏதுவாக இருக்கும் என்பதால் சிவகங்கையில் சட்டக் கல்லூரி தொடங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் சிவகங்கையில் சட்டக் கல்லூரி தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது காரைக்குடியில் சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏஐடியூசி மற்றும் இளைஞர் அமைப்பான அகில இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சிவகங்கை நகரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் கூறியிருப்பதாவது:
'மாவட்டத் தலைநகர் சிவகங்கையில் அமைய வேண்டிய சட்டக் கல்லூரியை காரைக்குடிக்கு தாரை வார்த்து கொடுத்து, சட்டப்பேரவையில் குரல் கொடுக்காமல் மவுனம் காத்து சிவகங்கை மக்களுக்கு துரோகம் செய்யும் செந்தில்நாதன் எம்எல்ஏவை (அதிமுக) கண்டிக்கிறோம்.' எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதைக் கண்டிக்கும் விதமாக அதிமுக ஒட்டிய சுவரொட்டிகளில் கூறியிருப்பதாவது: வேளாண் கல்லூரி, சட்டக் கல்லூரி சிவகங்கையில் அமைக்க வேண்டும் என்று செந்தில்நாதன் எம்எல்ஏ சட்டப்பேரவையில் வலியுறுத்திய பிறகும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஒரு கல்லூரி கூட சிவகங்கை தொகுதிக்கு ஒதுக்காமல் புறக்கணித்த திமுக அரசை கண்டிக்காமல், எம்எல்ஏவை அவதூறு செய்யும் ஏஐடியூசி, அகில இந்திய இளைஞர் பெருமன்றத்தை கண்டிக்கிறோம், என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் சிவகங்கையில் சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி அறிவிக்கப்படாததற்கு திமுக அரசு, கார்த்தி சிதம்பரம் எம்பியை கண்டித்து அமமுக நகரச் செயலாளர் அன்புமணி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago