வேளாண் பொறியியல் துறை சார்பில் - கரும்பு நாற்று நடவு இயந்திரம் செயல்விளக்கம் குறைந்த வாடகையில் வழங்க நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

ஈரோட்டில் வேளாண் பொறியியல் துறை சார்பில், விவசாயி களுக்கு குறைந்த வாடகையில் வழங்கும் வகையில், கரும்பு நாற்று நடவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இயந்திரத்தின் செயல்முறை விளக்கம் கொடுமுடி அருகேயுள்ள சோலங்கா பாளையம் கிராமத்தில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மைப் பொறியியல் துறை கண்காணிப்புப் பொறியாளர் உண்ணிகிருஷ்ணன், வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி, செயற்பொறியாளர் (வே.பொ) விஸ்வநாதன், காலிங்க ராயன் பாசன சபைத் தலைவர் வேலாயுதம் மற்றும் சுற்று வட்டார கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர்.

புதிய இயந்திரம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

ஏற்கெனவே நன்கு விளைந்த கரும்பின் கரணையை கொண்டு தற்போது கரும்பு நடப்பட்டு விளைவிக்கப்படுகிறது. இதற்கு ஒரு ஏக்கருக்கு 3 முதல் 4 டன் கரும்பு தேவைப்படுகிறது. நடவு செய்வதற்கு அதிக கூலி ஆட்கள் தேவைப்படுகிறது. இதற்கு மாற்றாக தற்போது வேளாண்மைப் பொறியியல் துறையில், ஒரு பரு சீவல் நாற்று நடவு முறை, இயந்திரம் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரும்பில் உள்ள ஒற்றை பருக்களை தனியே எடுத்து, குழி தட்டில் வைத்து நாற்றுகளை தயாரித்து பயன்படுத்தப்படுகிறது.

இந்த முறையில் ஒரு ஏக்கருக்கு 600 கிலோ கரும்பு இருந்தால் போதுமானதாகும். குழித்தட்டில் வளர்க்கப்பட்ட நாற்றுகளை நாற்று நடவு இயந்திரத்தில் இரண்டு வரிசையாக தேவையான இடைவெளியில் குறிப்பிட்ட ஆழத்தில் நடவு செய்யப்படுகிறது. இதற்கு 20 முதல் 30 நாட்களான நாற்று போதுமானதாகும்.

இந்த இயந்திரத்தினை இயக்குவதற்கு 3 நபர்கள் போதுமானதாகும். ஒரு நாளைக்கு 3 முதல் 4 ஏக்கர் வரை நடவு செய்யலாம். மேலும், கரும்பு பயிருக்கான நீர் தேவை 30 சதவீதம் குறைகிறது. குறைந்த வாடகையில் இந்த இயந்திரம் விவசாயிகளுக்கு வழங்கப்படு வதால், சாகுபடி செலவு பெருமளவு குறைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்