ஆதியன் பழங்குடியின குழந்தைகளுக்கு மறுவாழ்வு : இடைநின்றவர்களை கண்டறிந்து பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் பள்ளியிலிருந்து இடைநின்ற ஆதியன் பழங்குடியின குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சியில் உள்ள காந்தி நகர் கிராமத்தில் ஆதியன் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது பூர்வீகத் தொழிலான ‘பூம் பூம்’ மாடுகளை வைத்து வருமானம் ஈட்டி குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இந்த மக்களின் குழந்தைகள் உள்ளூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை பயில்கின்றனர். சிலர் 8 அல்லது 9-ம் வகுப்பு வரை பயில்கின்றனர். அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் கல்வியைத் தொடர்வதில்லை.

இதுகுறித்து உள்ளூர் பள்ளி ஆசிரியர்கள் அளித்த தகவலின் பேரில் மணிகண்டம் வட்டாரக் கல்வி அலுவலர் கா. மருதநாயகம் மற்றும் கிஆபெ விசுவநாதம் பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் அந்த பகுதிக்குச் சென்று அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் இதுபோன்று பள்ளிக் கல்வியைத் தொடராமல் 18 வயதுக்குட்பட்ட 54 மாணவ, மாணவிகள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மருதநாயகம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தலின் பேரில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் வழிகாட்டுதலின் அடிப்படையில் பள்ளியிலிருந்து இடை நின்ற மாணவர்களின் விருப்பங்களை கேட்டறிந்து, அவர்கள் விரும்பும் கல்வியை ஏற்பாடு செய்து தர விரும்பினேன்.

இதைத் தொடர்ந்து இந்த கிராமத்துக்கு பல முறை சென்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேசியதில், பல மாணவர்களுக்கு கல்வி கற்பதில் அதிக விருப்பம் இல்லாததும், விளையாட்டு மற்றும் இசை ஆகியவற்றை கற்றுக் கொள்ள ஆர்வத்துடன் இருப்பதும் தெரியவந்தது.

முதல்கட்டமாக இந்த கிராமத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர் சந்தானராமனை அவரது விருப்பப்படி திருச்சி அரசு இசைப்பள்ளியில் நாதஸ்வரம் பயிற்சி பெற சேர்த்துள்ளோம்.

இதையறிந்த அரசு இசைப்பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி, இசையில் ஆர்வமுள்ள மாணவர்களை இசைப்பள்ளியில் சேர்க்க தானும் அந்த கிராமத்துக்கு வந்து மாணவர்களிடம் பேசுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை விளையாட்டு விடுதியில் சேர்த்து பயிற்சியளிக்கவும் திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களை அருகிலுள்ள அரசுப்பள்ளியில் சேர்த்து கல்வி கற்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

இங்குள்ள 120 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஜாதிச் சான்றிதழ் பெறுவதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறை மூலம் எடுத்து வருகிறோம். இதனால் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது என்றார்.

ஏறத்தாழ 200 குடும்பங்கள் உள்ள இந்த கிராமத்தில் ஒரே ஒரு இளைஞர் தான் தற்போது பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்