எவ்வித பாகுபாடும், கட்சி பேதமும் இன்றி அனைவருக்கும் தேவையான நலத் திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பெல் சமுதாயக் கூடத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், வருவாய்த் துறை சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை, புதிய ரேஷன் கார்டு, சமூக நலத் துறை சார்பில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சேமிப்புப் பத்திரம், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் இலவச சலவைப் பெட்டி, வேளாண் துறை சார்பில் வேளாண் உபகரணங்கள் என பயனாளிகள் 88 பேருக்கு ரூ.35,31,019 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.
அப்போது அவர் பேசியது: ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து எவ்வித பாரபட்சமும், எவ்வித பாகுபாடும், எவ்வித கட்சி பேதமுமின்றி அனைவருக்கும் தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றி நலத் திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார் என்றார்.
பிற வகுப்புகள் திறப்பு எப்போது?
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியது: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை முதல்வரிடம் அளித்துவிடுவோம். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்.30-ம் தேதி வரை அமலில் உள்ளதால், அதன்பிறகு முதல்வர் நடத்தவுள்ள கலந்தாலோசனைக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை அளித்த அறிக்கையும் ஆய்வு செய்யப்படும். அந்தக் கூட்டத்தில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் கூறும் ஆலோசனையையொட்டி, பிற வகுப்புகளைத் திறப்பதா, வேண்டாமா என்று முதல்வர் முடிவு செய்து அறிவிப்பார் என்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், கோட்டாட்சியர் எஸ்.விஸ்வநாதன், வட்டாட்சியர் செல்வகணேஷ், முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago