தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் 2,284 பதவிகளுக்கு நேரடி தேர்தல் 2 கட்டமாக அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக 1,328 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 438 ஆண் வாக்காளர்கள், 3 லட்சத்து 85 ஆயிரத்து 940 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 24 பேர் என மொத்தம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 402 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்டமாக 6-ம் தேதி 754 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடக்கிறது. கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி ஊராட்சி ஒன்றியங்களில் இரண்டாம் கட்டமாக 9-ம் தேதி 574 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடக்கிறது.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்-14 பதவியிடங்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்-144 பதவியிடங்கள், கிராம ஊராட்சி தலைவர் -221 பதவியிடங்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் -1,905 பதவியிடங்களுக்கு நேரடி தேர்தல் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட ஊராட்சிக்குழு, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவரை தேர்ந்தேடுக்க அக்டோபர் 22-ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது.
மாவட்ட ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் -1 பதவியிடம், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் -10 பதவியிடங்கள், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் -10 பதவியிடங்கள், கிராம ஊராட்சி துணைத்தலைவர் -221 பதவியிடங்கள் என மொத்தம் 243 பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. தென்காசி மாவட்டத்தில் 277 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
22 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் 303 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்காக 10 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு கண்காணிப்பு அறை தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை 04633-290548 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago