அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை பொதுப்பிரிவுக்கு ஒதுக்கக்கோரி அப்பகுதியைச்சேர்ந்த ஒரு தரப்பினர் இரண்டாவது முறை யாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப் பத்தூர் உள்ளிட்ட விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடஒதுக்கீட்டில் காட்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியலின பெண் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஊராட்சியில் பட்டியலின பெண்கள் இல்லை என்பதால், அம்முண்டி ஊராட்சியை பொதுப் பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று இரண்டாவது முறையாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, ‘‘அம்முண்டி ஊராட்சியில் மொத்தம் 2,049 வாக்குகள் உள்ளன.இதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்கள் 2 பேருக்கு மட்டுமே வாக்கு உள்ளது. அவர்களும் கலப்பு திருமணம் செய்தவர்கள். பட்டியலின வாக்கு அதிகம் இல்லாத இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.
எனவே, அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லையேல், ஊரக உள்ளாட்சித் தேர்தலை அம்முண்டி ஊராட்சி மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், எங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றையும் காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைப்போம்’’ என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் தற்போது போராட்டம் நடத்துவது சட்டவிரோதமானது எனவும், இது தொடர்பாக அரசு உயர் அதிகாரி களிடம் கோரிக்கை மனுவாக கொடுத்து பிரச்சினையை சுமூகமாக முடித்துக்கொள்ள வேண்டும்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் போராட்டம், சாலை மறியல், போராட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை என்பதால் பொதுமக்கள் அமைதியாக கலைந்து செல்ல வேண்டும் என காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து, பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago