சேலம் அரசு மருத்துவமனையில் - இருதய பிறவி குறைபாட்டுக்கு பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை :

சேலம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு இருதய பிறவி குறைபாட்டுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை 20-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் 2.6 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை அழாததால் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

இருப்பினும், குழந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டு, எடையும் குறைந்தது. இதையடுத்து, நடந்த இருதய பரிசோதனையில் குழந்தையின் இருதயத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருதய சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் கூறியதாவது:

குழந்தை பிறந்த 6-வது நாளில் குழந்தைக்கு இருதய துடிப்பு வேகமாக இருந்தது. பின்னர் துடிப்பு குறைந்துடன், எடையும் 1.75 கிலோவாக குறைந்தது.

கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு பெருந்தமனிக்கும், நுரையீரல் தமனிக்கும் இடையே நாளத்தமனி என்ற இணைப்பு இருக்கும். குழந்தை பிறந்த 1 முதல் 7 நாட்களில் இது தானாக மூடிவிடும். சில குழந்தைகளுக்கு இது நிலைத்த நாளத்தமனியாக மாறிவிடும். இதனை மருந்துகள் மூலம் சரிசெய்யலாம்.

ஆனால், இக்குழந்தைக்கு மருந்துகள் பலனளிக்கவில்லை. இருதய செயல்திறன் குறைந்ததாலும் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி அறுவை (PDA LIGATATION) சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இருதயக் குறைபாடு சரி செய்யப்பட்டு குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.

பச்சிளம் குழந்தைக்கு இத்தகைய அறுவை சிகிச்சை சேலம் அரசு மருத்துவமனையில் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டது. தனியார் மருத்துவமனையில் ரூ.5 லட்சம் வரை செலவாகும். இங்கு இலவசமாக செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர். பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை மருத்துவமனை டீன் வள்ளி சத்யமூர்த்தி பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்