சாதாரண பயணிகள் ரயில்களை இயக்கக் கோரி, ரயில்வே திருச்சி கோட்ட மேலாளரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று மனு அளித்தனர்.
இதுதொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் லெனின், மாவட்டத் தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா ஊரடங்கு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு சிறப்பு ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பகுதி மக்கள் அன்றாட வாழ்வாதார தேவைகளுக்கான பயணம் மேற்கொள்ளும் சாதாரண பயணிகள் ரயில் இன்னும் இயக்கப்படவில்லை. இதனால், ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், சிறப்பு ரயில்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள், விளையாட்டு வீரர்கள், சிறார்கள் உள்ளிட்டோருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த சலுகைகள் மறுக்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளில் அவர்கள் பயணிக்க அனுமதிக்கப்படாமல், பொதுப் பெட்டியிலேயே பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், மாற்றுத்திறனாளிகள் பொதுப் பெட்டிகளில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, மத்திய அரசும், ரயில்வே துறையும் சாதாரண பயணிகள் ரயிலை உடனடியாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், பல்வேறு தரப்பினருக்கு ஏற்கெனவே வழங்கி வந்த சலுகைகளையும் வழங்க வேண்டும் என தெரிவித் துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago