திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து பதாகை கள், சுவரொட்டிகள் அகற்றும் பணி மேற்கொள்ளப் பட்டது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்தப்படுகிறது. வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நேற்றுமுன்தினம் இரவிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட கேடிசி நகர் பகுதிகளில் பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் கட்சி கொடிகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இதுபோல மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் அரசு நலத்திட்டங்கள் சம்பந்தமான அறிவிப்பு பதாகைகளை பணியாளர்கள் அகற்றினர்.
பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் தொடர்பாக அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 30 கிராம ஊராட்சிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் குமாரதாஸ் தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட தேர்தல் அலுவலர்கள், துணை தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர். ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடுவோர் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகங்களிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago