தண்டராம்பட்டு அருகே - குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : காவல் துறையினர் பேச்சுவார்த்தை

By செய்திப்பிரிவு

தண்டராம்பட்டு அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங் களுடன் கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சே.ஆண்டாப்பட்டு ஊராட்சி இந்திரா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களுக்கு சாத்தனூர் அணையில் இருந்து தானிப்பாடிக்கு செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் மின் மோட்டார் பழுது காரணமாக கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திர மடைந்த கிராம மக்கள், தண்டராம்பட்டு – தானிப்பாடி சாலையில் காலிக் குடங்களுடன் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், குடிநீர் இல்லாமல் தாங்கள் அவதிப்படுவதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவலறிந்த தண்டராம்பட்டு காவல் துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் குப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் பழுதடைந்துள்ள மின் மோட்டாரை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்