மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் அ.பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ந.சுப்ரமணி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் கூறும்போது, ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக இருந்த மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் கடந்த ஆண்டு தொலைதூரத்திலுள்ள புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
புதிய கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய வசதிகள் இல்லை. எனவே, மீண்டும் பழைய கட்டிடத்திற்கு அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்ததுடன் போராட்டமும் நடத்தப்பட்டது. எனினும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம், என்றனர்.
மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் (பொறுப்பு) ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை மீண்டும் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கே மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago