உடல் ஆரோக்கியம் மேம்பட குடற்புழு நீக்க மாத்திரை அவசியம் : மாணவ, மாணவியருக்கு ஆட்சியர் அறிவுரை

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் சார்பில் எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:

ரத்த சோகை நோய்க்கு முக்கிய காரணியாக விளங்கும் குடற்புழுவை நீக்க ஆண்டுதோறும் மாணவ, மாணவியருக்கு இரண்டு முறை குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. குடற்புழு நீக்கத்தால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. 19 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் குடற்புழு மாத்திரையின் முக்கியத்துவத்தை மாணவர்கள் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இம்மாத்திரைகள் அங்கன்வாடி மையங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல் பள்ளிகளில் அனைத்து வியாழக்கிழமைகளிலும் அரசால் வழங்கப்படும் இரும்பு சத்து மாத்திரைகளை மாணவ, மாணவியர் அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வரும் 18-ம் தேதி வரை முதல் சுற்று, வரும் 20 முதல் 25-ம் தேதி வரை 2-ம் சுற்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்கள் நடைபெறவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 5 லட்சத்து 89 ஆயிரத்து 401 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணி அல்லாத 1 லட்சத்து 53 ஆயிரத்து 830 பெண்களுக்கும் குடற்புழு நீக்கும் அல்பென்டசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

முன்னதாக குடற்புழு நீக்க கையேட்டினை மாவட்ட ஆட்சியர் வெளியிட முதன்மைக் கல்வி அலுவலர் அ.பாலமுத்து மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மேலும், பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட்டன. மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன், எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் தோ.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்