குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளி திட்ட பயிற்றுநர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படாத நிலையில், இப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் மூலம் 8 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கல்வி அளிக்க, சிறப்புப் பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், மதிய உணவு, சீருடை, புத்தகங்கள் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டு, 8-ம் வகுப்பு வரை கல்வி வழங்கப்படுகிறது. அதன்பின்னர், அருகில் உள்ள முறைசார் பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்த்து தொடர்ந்து கல்வி பெற ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மலைக்கிராமங்களான கடம்பூர், குன்றி, பர்கூர் உள்ளிட்ட இடங்களில் 6 இடங்களிலும், கோபி, பெருந்துறை, பவானி உள்ளிட்ட சமவெளிப் பகுதிகளில் 9 இடங்கள் என மொத்தம் 15 குழந்தைத் தொழிலாளர் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 270 மாணவ, மாணவியர் படித்து வந்தனர். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7000 வீதம் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா பாதிப்பு காரணமாக இந்த பள்ளிகள் மூடப்பட்டு, ஆசிரியர்களுக்கான சம்பளமும் நிறுத்தப்பட்டது. இப்பள்ளிகளைத் திறக்கக் கோரியும், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தியும், எம்பிக்கள் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் இதுவரை அதற்கான பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில், குழந்தைத் தொழிலாளர் பள்ளி மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை, பள்ளிக்கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சியில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைத் தொழிலாளர் பள்ளி மாணவர்கள், தங்கள் வீடுகளிலோ, அருகில் உள்ள மாணவர் வீடுகளிலோ, பள்ளி ஆசிரியரின் வீட்டிலோ டிவியில் இந்த வகுப்புகளில் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:
குழந்தைத் தொழிலாளர் பள்ளிகளில் மிகக்குறைந்த சம்பளத்தில், சேவை நோக்கில் ஆசிரியராக பணியாற்றியவர்களுக்கு, ஒன்றரை ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், பலர் வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர்.
குடும்ப வறுமை சூழலால்தான், இந்த மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறி, அதன் பின்னர் மீட்கப்பட்டு, பள்ளியில் சேருகின்றனர். இவர்கள் வீடுகளில் கல்வி தொலைக்காட்சி மூலம் படிக்க வேண்டும் என்பது சாத்தியமில்லாதது. இப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளாக சம்பளம் வழங்காத அரசு, அவர்கள் வீட்டில் உள்ள டிவியில் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி பார்த்து படிக்கலாம் என அறிவித்துள்ளது அபத்தமானது, என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago