சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தை வழிமறித்த ஒற்றையானையால் பயணிகள் அச்சமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. கடந்த சில மாதங்களாக தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரி ஓட்டுநர்கள், வனப்பகுதியை ஒட்டிய சாலைகளில், யானைகளுக்காக கரும்புகளை வீசிச் செல்கின்றனர். கரும்புகளைச் சுவைத்துப் பழகிய யானைகள், மீண்டும் அதே இடங்களில் சாலையோரமாக சுற்றித் திரிகின்றன. கரும்பு ஏற்றி வரும் லாரிகளை மடக்கி, யானைகள் கரும்பை சாப்பிடும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்லும் அரசுப் பேருந்தை, ஆசனூர் அருகே ஒற்றை யானை வழிமறித்தது. பேருந்தையொட்டி யானை நின்றதால், பயணிகள் அச்சமடைந்தனர். பேருந்தின் முன்பகுதி கண்ணாடியை துதிக்கையால் தடவிப்பார்த்த யானை, ஜன்னல் வழியாக துதிக்கையை யானை நுழைத்ததால், பயணிகள் பயத்தில் அலறினர். பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை மெதுவாக நகர்த்தி கிளம்பியதால், பயணிகள் நிம்மதி அடைந்தனர். அதன் பின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்றது.
வனத்துறை எச்சரிக்கை
யானைகள் உண்பதற்கு ஏற்றவாறு மூங்கில் உள்ளிட்ட தாவரங்கள், ஆசனூர் வனப்பகுதியில் உள்ளன. எனவே, யானைகளுக்கு கரும்புகளை வீசி அவற்றை திசைதிருப்பக் கூடாது என லாரி ஓட்டுநர்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யானைகள் சாலையோரம் நடமாடினால், வாகனத்தை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள வனத்துறையினர், யானைகளுடன் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago