ஜவ்வரிசி உள்ளிட்டவற்றில் செய்யப்படும் கலப்படம் காரணமாக, நுகர்வு குறைந்ததால் மரவள்ளிக்கிழங்கிற்கான விலை சரிந்துள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது
இதுகுறித்து கூட்டமைப்பின் செயலாளர் செ. நல்லசாமி கூறியதாவது:
வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரவள்ளிப் பயிர் தமிழகம், கேரளாவில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தொழிற்சாலை மூலப் பொருளாகவும், உணவாகவும் பயன்படும் மரவள்ளியை அடிப்படையாகக் கொண்டு சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டத்தில் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் ஆலைகள் செயல்படுகின்றன.
கடந்த 2012-13-ம் ஆண்டுகளில் ஒரு டன் கிழங்கு ரூ.10 ஆயிரத்துக்கும் மேலாக விற்கப்பட்டது. ஆனால் இன்று விலை வீழ்ச்சி அடைந்து டன் ரூ.4100-க்கு விற்கப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சிக்கு கலப்படமே முக்கிய காரணமாக உள்ளது.
கண்ணைப் பறிக்கும் விதத்தில் ஜவ்வரிசியும், ஸ்டார்ச்சும் இருந்தால் மட்டுமே நல்ல விலைக்குப் போகும் எனக் கருதி, சலவை ஆலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. மரவள்ளி மாவுடன், மக்காச்சோளம், ரேஷன் அரிசி, அரிசிக்குருணை மாவுகள் மற்றும் சாக்பீஸ் சுண்ணாம்பு மாவும் கலப்படம் செய்யப்படுகிறது.
இந்த முறைகேடு வெளிப்பட்டதன் விளைவாக, இந்திய அளவில் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் நுகர்வு வெகுவாகக் குறைந்தது. காகிதத் தொழிற்சாலைகளும், ஜவுளி ஆலைகளும், தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து தரமான ஸ்டார்ச்சை இறக்குமதி செய்யத் தொடங்கிவிட்டன. நோன்புக் கஞ்சிக்கு ஜவ்வரிசியைப் பயன்படுத்துவது வெகுவாகக் குறைந்து போனது. எனவே, கலப்படத்தைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன்மூலம் மட்டுமே நுகர்வு அதிகரித்து, மரவள்ளிக்கிழங்கிற்கு சரியான விலையை விவசாயிகள் பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago