மண்ணச்சநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் எம்எல்ஏ சீ.கதிரவன் கோரிக்கை விடுத்தார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ சீ.கதிரவன் கன்னிப்பேச்சில் பேசியது:
காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள திருத்தலையூர்ஏரி, சித்தாம்பூர் ஏரி, கோமங்கலம் ஏரி, நெய்வேலி ஏரி, திருத்தியமலை ஏரி, புலிவலம் ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். சமயபுரம்-மண்ணச்சநல்லூர் மற்றும் நொச்சியம்- மண்ணச்சநல்லூர் சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக தரம் உயர்த்த வேண்டும்.
மண்ணச்சநல்லூர் தொகுதியில் சமயபுரம், ஓமாந்தூர், உத்தமர்கோவில், திருவெள்ளறை, திருவாசி, திருப்பைஞ்ஞீலி, திருப்பட்டூர் ஆகிய இடங்களில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்களின் வசதிக்காக தங்குமிடம், கழிப்பிட வசதிகள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
திருவெள்ளறை, சிறுகனூர் ஊராட்சிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். கொணலை, ஓமாந்தூர், பெரகம்பி ஊராட்சிகளில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.
மண்ணச்சநல்லூர் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். தொழிற்பேட்டை அமைத்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவெள்ளறை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை மாதிரி மேல்நிலைப் பள்ளிகளாகவும், நெய்வேலி, காட்டுக்குளம் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்த வேண்டும். திருத்தியமலை, திருவெள்ளறை, பூனாம்பாளையம் ஊராட்சிகளில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும்.
எதுமலை கிராமத்தில் வேளாண் துணை விரிவாக்க மையம், கொடுங்குழை ஊராட்சி பெரிய கொடுந்துறையில் தானிய சேமிப்பு கிடங்கு கட்ட வேண்டும். மண்ணச்சநல்லூர் தொகுதியில் விளையாட்டு கலைக்கூடம் அமைத்து அதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்டவேண்டும்.
கரியமாணிக்கம் ஊராட்சியில் வாத்தலை, முக்கொம்பு மேலணையில் உள்ள பூங்காவை மேம்படுத்தி தீம்பார்க் அமைத்துசுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி மாவட்டம் மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்டுள்ளதால் உப்பிலியபுரம், பச்சமலை, தொட்டியம் உள்ளிட்ட பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி, துறையூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை ஒருங்கிணைத்து மண்ணச்சநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago