எஸ்டிபிஐ கட்சி மாவட்ட பொருளாளர் செய்யது மஹ்மூத் தலைமையில் தென்காசி நகராட்சி 10-வதுவார்டு, பாறையடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாய்,தலையணை, காலி குடங்களுடன் தென்காசி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அதில், ‘பாறையடி, இரண்டாம் தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக சாலை, குடிநீர், கழிவுநீர் ஓடை, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இப்பகுதியின் கழிவு நீர் தெருக்களில் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் அளித்துள்ள மனுவில், ‘கரோனா பரவல் காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் குற்றாலம் அருவிகளில் இன்னும் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால், சுற்றுலாப் பயணிகளைநம்பி உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று, குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
கடையநல்லூர் வட்டம், காசிதர்மம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அளித்துள்ள மனுவில், ‘காசிதர்மம் பகுதியில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டுவந்தது. தற்போது அந்த நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டுள்ளது. விவசாயிகள் நலன் கருதி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago