திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பெரும்படையார் கோரிக்கை மனு அளித்தார்.
அதில், ‘நாங்குநேரி வட்டம், திருக்குறுங்குடி பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் 500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை தொடங்கிவிட்டது. தனியார் வியாபாரிகள் விலை குறைப்பு, எடை மோசடி செய்து நெல்லை வாங்குகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. திருக்குறுங்குடியில் உள்ள திருப்பாற்கடல் கோயில் அன்னதான சத்திரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்திறக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
பாளையங்கோட்டை சண்முகா நகர் தெற்கு, எஸ்எஸ்ஆர் தெரு, விநாயகர் தெரு மக்கள் நல்வாழ்வு சங்க நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில், ‘பாளையங்கோட்டை, என்ஜிஓ காலனியின் மையப் பகுதியில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலம் சுமார் 400 வீடுகளுக்கான அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பகுதியில் ஏற்கெனவே தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில், 30 முதல் 40 வீடுகள் அளவுக்கு உள்ள இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக ஏற்படும் நிலை உள்ளது. அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்புஉள்ளது. மேலும், தரமற்ற முறையில் கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த கட்டிடத்தை ஆய்வு செய்து, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
சமூகநீதி இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தமிழரசு, கதிரவன், லெனின் உள்ளிட்டோர் அளித்துள்ள மனுவில், ‘பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையைச் சுற்றி இரும்புக் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் வருத்தம் தரக்கூடியதாக உள்ளது. இரும்பு கூண்டை அகற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
நேதாஜி சுபாஷ் சேனை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் முத்து சரவணன் அளித்துள்ள மனுவில், ‘பாளையங்கோட்டை வட்டம், உத்தமபாண்டியன்குளம் கிராமத்தில் சுமார்100 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அந்த இடத்தைசிலர் அதிகாரிகள் துணையுடன் பட்டா பெற்று விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்களும் அந்த இடத்தை வாங்கி ஏமாந்து வருகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி, பல கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அதில், ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைவான நாட்களே வேலை வழங்கப்படுகிறது. மேலும், சம்பளமும் குறைவாகவே வழங்கப்படுகிறது. முறையாக வேலை, சம்பளம்வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago