வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங் கும் திட்டத்தின் கீழ் 5.17 லட்சம் பேருக்கு மாத்திரை வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒன்று முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு (கர்ப்பிணிகள் மற்றும் பாலுட்டும் தாய்மார்கள் தவிர) நேற்று முதல் வரும் 18-ம் தேதி வரை (ஒரு வாரம்) குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு குடற்புழு மாத்திரை வழங்கப்பட உள்ளது.
மேலும், பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு வீடு, வீடாகச் சென்று மாத்திரைகளை வழங்க உள்ளனர். ஒரு வயது முதல் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு அரை மாத்திரையும், 2 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு தலா ஒரு முழு மாத்திரையும் வழங்கப்படும். அடுத்த கட்டமாக வரும் 20-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறும். இரண்டு சுற்றுகளில் விடுபட்டவர்களுக்கு வரும் 27-ம் தேதி மாத்திரைகள் வழங்க உள்ளனர்.
தேசிய குடற்புழு நீக்க மாத் திரை வழங்கும் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் 19 வயதுக்கு உட்பட்ட 4 லட்சத்து 3 ஆயிரத்து 906 பேருக்கும், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 495 பெண்கள் என மொத்தம் 5 லட்சத்து 17 ஆயிரத்து 401 பேருக்கு மாத்திரை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
வேலூர் முஸ்லீம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, வேலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பானுமதி, மாநகர சுகாதார நல அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago