சேலம் மாவட்டத்தில் நேற்று 28 மையங்களில் நீட் தேர்வு நடந்தது. உயிரியல் வினாக்கள் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வுக்காக 28 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுத பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் 15 ஆயிரத்து 67 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதில் 14,474 பேர் தேர்வில் பங்கேற்றனர். மாணவர்கள் பலர் தங்கள் பெற்றோருடன் காலையிலேயே தேர்வு மையங்களுக்கு வந்தனர்.
வெளியூர்களில் இருந்து பலர் கார்களில் வந்ததால், தேர்வு மையங்களில் ஏராளமான கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. தேர்வுக்கு வந்த மாணவ, மாணவியர்கள் ஆபரணம் அணியாமல் , எளிமையாகவும், பலர் பள்ளி சீருடை அணிந்தும் தேர்வில் பங்கேற்றனர்.
தேர்வு மையத்துக்கு அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தனர். எனினும் பல இடங்களில் யாரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. மதியம் ஒன்றரை மணி வரை தேர்வு மையத்துக்குள் கடுமையான கெடுபிடிகள் இன்றி அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு மையத்துக்குள் மாணவர்கள் குடிநீர் பாட்டில்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் கூறும்போது, “இயற்பியல், வேதியியல் பாடங்களில் வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. உயிரியல் பாடத்தில் வினாக்கள் எளிமையாக இருந்தது” என்றனர்.
நாமக்கல்லில் 6 மையம்
நாமக்கல் மாவட்டத்தில் 6 மையங்களில் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உடல் வெப்பநிலை சோதனை மேற்கொள்ளப்பட்டு மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று நீட் தேர்வை எழுதினர்.
நீட் தேர்வு எழுத 3,853 மாணவ, மாணவியர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் நேற்று 3,736 பேர் (96.96 சதவீதம்) தேர்வு எழுதினர்.
நீட் தேர்வையொட்டி, நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago