கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு சரிசெய்யப்பட்ட நிலையில், சோதனை ஓட்டமாக விநாடிக்கு 200 கன அடி நீர் நேற்று திறக்கப்பட்டது.
பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றன. இதில், ஒரு லட்சத்து 3500 ஏக்கர் பாசனப் பரப்பிற்காக, ஆகஸ்ட் 15-ம் தேதி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது. நசியனூரை அடுத்த கண்ணவேலம்பாளையம் பகுதியில், கீழ்பவானி வாய்க்காலில் பராமரிப்பு பணி நடந்த இடத்தில், கடந்த மாதம் 19-ம் தேதி உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறியது. இதனால் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. வாய்க்காலில் உடைப்பை சரிசெய்யும் பணி கடந்த 20 நாட்களாக நடந்த நிலையில், நேற்று முன் தினம் நிறைவடைந்தது.
இதையடுத்து சோதனை ஓட்டமாக நேற்று காலை 6 மணி முதல், கீழ்பவானி வாய்க்காலில் விநாடிக்கு 200 கன அடி நீர் திறக்கப்பட்டது. உடைப்பு சரிசெய்யப்பட்ட இடத்தை நீர் கடக்கும் போது, கசிவு ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்தபின்னர், நீர் திறப்பின் அளவு அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் வேதனை
கீழ்பவானி வாய்க்காலில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி, கடந்த ஆட்சிக்காலத்தில் ரூ.710 கோடி மதிப்பிலான பராமரிப்புப் பணிகள் தொடங்கின. அவ்வாறு நடந்த பணியில் ஏற்பட்ட தரக்குறைவால், கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, பாசனத்துக்கு நீர் செல்வது 20 நாட்களாக தடைபட்டு இருந்தது.பவானிசாகர் அணையில் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. அணையில் நீரினைத் தேக்கி வைக்க முடியாததால் விநாடிக்கு 4000 கனஅடிவரை உபரி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. தற்போது கீழ்பவானி உடைப்பு சீரமைக்கப்பட்ட நிலையில், அணைக்கான நீர் வரத்து குறைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 102 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 30.31 டிஎம்சியாகவும் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 829 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் 200 கனஅடியும், காலிங்கராயன் வாய்க்காலில் 488 கனஅடியும், பவானி ஆற்றில் 112 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago