சேலம், நாமக்கல், ஈரோட்டில் 2.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

சேலம், நாமக்கல், ஈரோட்டில் நேற்று நடந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் 2.91 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் நேற்று கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் 1,235 வாக்குச்சாவடி மையங்கள், 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,12 அரசு மருத்துவமனைகள், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை என 1,356 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முகாமில் பொதுமக்கள் விருப்பத்துக்கு ஏற்ப கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டன. தடுப்பூசி போடும் பணியில் தலா 1,356 கிராம செவிலியர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள் ஈடுபட்டனர்.

சேலத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக ஆட்சியர் கார்மேகம் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் சிறப்பு முகாம் மூலம் 98 ஆயிரத்து 743 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மக்கள் மிகுந்த ஆர்வமுடன் முகாம்களுக்கு வந்திருந்து தடுப்பூசியைப் போட்டுக் கொண்டனர்.

சிறப்பு முகாம்கள் மூலம் ஒரே நாளில்ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 371 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சிறப்பு தடுப்பூசிமுகாம் இலக்கைக் கடந்து 113 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,என்றார்.

நாமக்கல்லில் 700 முகாம்

நாமக்கல் மாவட்டம் முழுவதும் 620 நிலையான மற்றும் 80 நடமாடும் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது. 893 செவிலியர்கள், 360 தன்னார்வலர்கள், 1,400 பள்ளி ஆசிரியர்கள், 160 சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இப்பணியை நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநருமான வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டனர்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வி.ரமேஷ், நாமக்கல் நகராட்சி ஆணையர் பு.பொன்னம்பலம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

சிறப்பு முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 80,630 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோட்டில் 97 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 847 மையங்களில் ஒரு லட்சத்து 5400 பேருக்கு நேற்று தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக மாவட்டம் முழுவதும் 3000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி முகாம் இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது.

ஈரோடு மாநகராட்சியில் நேற்று 16 ஆயிரத்து 315 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 97,139 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா தடுப்பூசி போட வருபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், முதல் தவணை தடுப்பூசி போட வருபவர்களுக்கு, குலுக்கல் முறையில் தேர்வு செய்து, தங்கக் காசு, வெள்ளிக் குத்துவிளக்கு, புடவை, வேட்டி வழங்கப்படும் என பவானி வட்ட வருவாய் அதிகாரிகள் தெரிவித்திருந்ததனர்.

இதையடுத்து, பவானி வட்டாரத்தில் ஆர்வத்துடன் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதற்கான குலுக்கல்நாளை (14-ம் தேதி) மாலை 4 மணிக்கு நடைபெறும் என பவானி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்